பாதசாரி மீது பைக் மோதி விபத்து தொழிலாளி உட்பட இருவர் பலி
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயலைச் சேர்ந்தவர் அழகிரி, 53; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, மீஞ்சூர் - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.திருவெள்ளவாயல், மாதாகோவில் அருகே செல்லும்போது, எதிரே வேகமாக வந்த 'யமஹா ஆர்15' பைக், அழகிரி மீது மோதியது. இதில், பைக்கில் வந்த மீஞ்சூர் அடுத்த கடப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28, சஞ்சய், 28, மற்றும் அழகிரி பலத்த காயமடைந்தனர்.பைக் ஓட்டி வந்த விக்னேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அழகிரி மற்றும் சஞ்சயை அங்கிருந்தோர் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அழகிரி இறந்தது தெரிய வந்தது. சஞ்சய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.