உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரமற்ற குடிநீர், குப்பை கழிவுகள் தேக்கம்

 பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரமற்ற குடிநீர், குப்பை கழிவுகள் தேக்கம்

ஊத்துக்கோட்டை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் தேங்கியுள்ள குப்பை கழிவுகளால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பெரியபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 1951ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு, பெரியபாளையம், ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், ராள்ளபாடி உள்ளிட்ட,25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு, ஐந்து மருத்துவர்கள்; ஐந்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் உள்ளனர். இங்கு, பொது மருத்துவம், பல், கண், சித்தா, யோகா, தொழுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், நாய், பாம்பு கடி மற்றும் மகப்பேறு ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உள்நோயாளிகள் சிகிச்சை பெற, 30 படுக்கைகள் உள்ளன. தினமும், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. பாசி படர்ந்த குடிநீர் தொட்டியில் நிரப்பப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், இந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளது. சுகாதார நிலைய வளாகத்தில், ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்துள்ளன. சாலை வசதி இல்லாததால், ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், கொசுக்கள் உருவாகி; நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், நோய் தீர்க்க வரும் மக்கள், நோயை பெற்றுச் செல்லும் அவலநிலை உள்ளது. கட்டடத்தின் சில இடங்களில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இங்குள்ள பூங்கா முறையாக பராமரிப்பதில்லை. ஆண்கள், பெண்கள் என, இரண்டு கழிப்பறை மட்டுமே உள்ளன. இது போதுமானதாக இல்லை. எனவே, மாவட்ட மருத்துவ துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, பெரியபாளையம் அரசு சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ