மீஞ்சூர்: சென்னை புறநகர் பகுதிகளில், வேகமாக வளர்ந்து வரும் மீஞ்சூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல், குடியிருப்புகளை சூழ்ந்தும், மழைநீர் கால்வாய்களில் தேங்கியும் இருப்பதால், மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. மீஞ்சூர் பேரூராட்சி, 18 வார்டுகளுடன், 8.29சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில், 7,554 குடியிருப்புகளில், 35,௦௦௦௦ மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள மழைநீர் கால்வாய்களில் குடியிருப்புகளின் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மீஞ்சூர்- நந்தியம்பாக்கம் பகுதிகளுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள், காலி இடங்களிலும், அங்குள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து, தெருச்சாலைகளில் வெளியேறி மக்களுக்கு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும், கழிவுநீர் தேங்கும் கால்வாய்கள் திறந்த நிலையில் இருப்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. கழிவுநீரால் நீர்நிலைகளும் மாசடைந்து, ஆக்சிஜன் அளவு குறைந்து, நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அதிகரித்து வரும் குடியிருப்புகள், மக்கள் தொகை ஆகியவற்றிற்கு ஏற்ப மீஞ்சூரில் கழிவுநீர் முறையாக கையாளப்படாமல், கால்வாய்களில் தேங்கி வருவதுடன், குடியிருப்புகளை சூழ்ந்து கிடப்பது சமூக ஆர்வலர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. மீஞ்சூர் பேரூராட்சியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.