தொழிற்சாலையில் மாமூல் கேட்ட வி.சி., நிர்வாகிக்கு காப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டிய, வி.சி., மாவட்ட துணை செயலரை கைது செய்த மணவாளநகர் போலீசார், திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். சென்னையைச் சேர்ந்தவர் விஸ்வநாத், 50. இவர், கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் 'கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி' எனும் துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் தொழிற்சாலையில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தொழிற்சாலைக்கு வந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வி.சி., துணை செயலராக பொறுப்பு வகித்து வரும் குமார், 45, என்பவர், 'எங்கள் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நீங்கள் இந்த செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, விஸ்வநாத்திடம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, மணவாள நகர் காவல் நிலையத்தில் விஸ்வநாத் புகார் அளித்தார். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின்படி, நேற்று முன்தினம் மணவாள நகர் போலீசார் குமாரை கைது செய்தனர். நேற்று மாலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனர்.