ஆசானபூதுாரில் தரைப்பாலம் சேதம் சீரமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆசானபூதுார்மேடு கிராமத்தில் இருந்து, பெரும்பேடு, வஞ்சிவாக்கம் மற்றும் மடிமைகண்டிகை ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையில் தரைப்பாலம் அமைந்து உள்ளது.ஆசானபூதுார் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள இந்த தரைப்பாலம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. பாலத்தின் கான்கிரீட் தளம் முழுதும் சேதம் அடைந்து, சரளை கற்கள் பெயர்ந்து உள்ளன.அவற்றில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் அவ்வழியாக பயணிக்கும் கிராமவாசிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.மின்விளக்கு வசதியில்லாத நிலையில், கிராமவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. பாலம் முற்றிலும் சேதம் அடைந்து பலவீனம் அடையும் முன், அதை புதுப்பிக்கவும், இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.