உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிட்ரபாக்கத்தில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு

சிட்ரபாக்கத்தில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு

ஊத்துக்கோட்டை : ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு, 3,000 கன அடி நீர் திறப்பு மற்றும் நந்தனம் மலைப் பகுதிகளில் இருந்து வந்த மழைநீர் ஆகியவை சேர்ந்து, ஆரணி ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், பிச்சாட்டூர் ஏரியின் நீர்மட்டம் 'கிடுகிடு' வென உயர்ந்தது. வினாடிக்கு, 5,400 கன அடிநீர் வந்ததால், ஏரியின் பாதுகாப்பை கருதி, நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 3,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.ஊத்துக்கோட்டை அடுத்த நந்தனம் மலைப்பகுதிகளில் இருந்து மழைநீர், ஆரணி ஆற்றில் கலந்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம், பனப்பாக்கம், பெரியபாளையம் வழியே தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.நேற்று காலை, 11:00 மணிக்கு சிட்ரபாக்கம் அணைக்கட்டில் இருந்து, சாய்கங்கை கால்வாய் வழியே பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.பூண்டி நிலவரம்: நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வினாடிக்கு, 3,080 கன அடி, கிருஷ்ணா நீர் 420 கன அடி, என மொத்தம் 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.நீர்த்தேக்கத்தில் தற்போது, 0.916 டி.எம்.சி., நீர் உள்ளது, நீர்மட்டம், 25.5 அடி. மழைநீர் தொடர்ந்து வரும் நிலையில், நீர்மட்டம் வேகமாக உயரும் என, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !