மேலும் செய்திகள்
ஏரிகள் திறப்பால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது
14-Dec-2024
சோழவரம்:சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. ஏரியின் கரைகள் சேதம் அடைந்ததை தொடர்ந்து, அதை சீரமைக்கும் பணிகள், ஆறு மாதங்களாக நடைபெறுகிறது.கரையின் உள்பகுதியில் கான்கிரீட் சுவர் அமைப்பது, மண் அரிப்பை தவிர்க்க சரிவுகளில் பாறைகள் பதிக்கப்படுவது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன மேலும், அவசரகால தேவைக்காக, ஏரியின் கலங்கல் பகுதியில் புதியதாக இரண்டு ஷட்டர்கள் அமைக்கப்பட்டன.ஏரி சீரமைப்பு பணிகளுக்காக, கடந்த அக்டோபர் மாதம், தேங்கியிருந்த தண்ணீர் பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது.வழக்கமாக வடகிழக்கு பருவமழையின்போது, நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் சோழவரம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும். தேவையின்போது, புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படும்.இந்நிலையில், தொடர் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இது மேலும் அதிகரிக்கும்போது, சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்படும். புழல் ஏரியிலும், தண்ணீர் தேங்கி இருப்பதால், அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருக்கிறது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு, இன்று முதல், மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, சோழவரம் ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றும் பணிகளில் நீர்வளத்துறை ஈடுபட்டு உள்ளது.இரு தினங்களாக ஏரியின் கலங்கல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஷட்டர்கள் திறக்கப்பட்டு, அவற்றின் வழியாக வினாடிக்கு, 209 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இது, அங்குள்ள கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு சென்று கொண்டிருக்கிறது.நேற்றைய நிலவரப்படி ஏரியில், 0.34 டி.எம்.சி., தண்ணீர் தேங்கி உள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்திற்கு ஏற்ப அவற்றை ஷட்டர்கள் வழியாக வெளியேற்றி கொசஸ்தலை ஆற்றிற்கு கொண்டு செல்லப்படும் என, நீர்வளத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
14-Dec-2024