திருமண மண்டப பணிகள் இரு ஆண்டாக பாராமுகம்
திருவாலங்காடு:திருவாலங்காடில் வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 2.35 கோடி ரூபாயில் திருமண மண்டபம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழை மக்கள் கவலையடைந்துள்ளனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிர்வாகம் சார்பில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், திருமண மண்டபம் கட்டி, குறைந்த வாடகைக்கு விட தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரில், கோவிலுக்கு சொந்தமான 7,000 சதுர அடியில், 2.35 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட, 2023ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கு, ஹிந்து அறநிலைய துறை ஆணையர் இரண்டு ஆண்டுக்கு முன் அனுமதி வழங்கி, அரசாணையும் வழங்கப்பட்டது. இப்பணிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் துவங்கும் என, மக்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திருமண மண்டபம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.