உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் துணை மின்நிலையம் அமைவது...எப்போது?:14 ஆண்டுகளாக பயனீட்டாளர்கள் காத்திருப்பு

மீஞ்சூரில் துணை மின்நிலையம் அமைவது...எப்போது?:14 ஆண்டுகளாக பயனீட்டாளர்கள் காத்திருப்பு

மீஞ்சூர்:மீஞ்சூரில் துணை மின்நிலையம் அமைக்க, திட்டமிடப்பட்டு, 14 ஆண்டுகள் ஆன நிலையில் அதற்கான எந்தவொரு முன்னெடுப்பு பணிகளும் நடைபெறாததால், குறைந்த மின் அழுத்தம் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஆகியவற்றில் இருந்து எப்போது விமோசனம் கிடைக்கும் என, பயனீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் அரியன்வாயல், எடப்பாளையம், அன்பழகன் நகர், புதுப்பேடு, கேசவபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 20,000 குடியிருப்புகள், 1,600 கடைகள், 12 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 10 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இங்கு, 22,000க்கும் அதிகமான மின்பயனீட்டாளர்கள் உள்ளனர்.இவைகளுக்கு 4 கி.மீ., தொலைவில் உள்ள மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் நடைபெறுகிறது. இங்கிருந்து மீஞ்சூர் மட்டுமின்றி நந்தியம்பாக்கம் புங்கம்பேடு, சீமாவரம் என, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது.பொன்னேரி துணை மின்நிலையத்திற்கு, 'பேக்பீட்' எனப்படும் அவசரகால மின்தேவைக்கும் மின்வினியோகம் நடைபெறுகிறது.மீஞ்சூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்குநாள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரித்து வருவதால், மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரம் போதுமானதாக இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.குறைந்த மின்அழுத்தம், இரவு நேரங்களில் அதிக மின்பயன்பாடு காரணமாக மின்மாற்றிகளில் பழுது ஆகியவற்றால் மின்வெட்டு ஏற்படுகிறது.மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு என, தனியாக மீஞ்சூர் பகுதியில், 33கிலோ வாட் துணை மின்நிலையம் அமைத்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் வலிறுத்தி வருகின்றனர்.இதையடுத்து 2011ல், மீஞ்சூர் பகுதியில், 33கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும் என, மின்வாரியம் தெரிவித்து, அதற்கான இடம் தேடும் பணி நடந்தது.அடுத்தடுத்து வந்த அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தாததால், காலப்போக்கில் எந்த நடவடிக்கையும் இல்லாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இதனால் தினமும் தொடரும் மின்வெட்டுகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுவது தொடர்கிறது.குறிப்பாக கோடைகாலங்களில் மின்வெட்டு பிரச்னையால், ஆழ்துளை மோட்டார்களை சரிவர இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பகல் நேர மின்வெட்டால் வியாபாரிகள் வணிக ரீதியான வருவாய் இழப்பிற்கு ஆளாகின்றனர்.சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக மீஞ்சூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன.இங்கு நாளுக்குள் நாள் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அதிகரித்து வருவதால், மின்தேவையும் பன்மடங்கு உயர்கிறது. இதனால் மீஞ்சூரில் துணை மின்நிலையம் அமைப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அரசு உரிய கவனம் செலுத்தி மீஞ்சூரில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை