| ADDED : ஜன 15, 2024 12:04 AM
பழவேற்காடு: வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பழவேற்காடு சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு, அழகிய கடற்கரை, கலங்கரை விளக்கம், டச்சு கல்லறைகள், பறவைகள் சரணலாயம் உள்ளிட்டவை உள்ளன.விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். குறிப்பாக, காணும் பொங்கல் நாளில் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணியர் வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், காணும் பொங்கல் நாளில், 30,000த்துக்கும் அதிகமானோர் வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இங்கு இல்லை.கடலில் ஜாலியாக குளித்து விளையாடுபவர்கள் தங்களது உடைகளை மாற்றிக் கொள்ளவும், நன்னீரில் குளிக்கவும், அவசர உபாதைகளை கழிக்கவும் சுகாதார வளாகம் இல்லை. மேலும், குடிநீர், மின்விளக்கு வசதிகளும் இல்லாததால், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நாளை மறுநாள் காணும் பொங்கல் என்பதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவர். சுற்றுலா பயணிருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழவேற்காடு பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சரியான திட்டமிடல் அவசியம். படகு சவாரியால் அசம்பாவிதங்கள் நேர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன், படகோட்டிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.