| ADDED : நவ 20, 2025 03:46 AM
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், விவசாயத்தை நம்பியே உள்ளனர். பெரும்பாலான விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்கு கிருஷ்ணசமுத்திரம் - நெட்டேரிகண்டிகை கூட்டுச்சாலை வழியாக தான் சென்றுவர வேண்டும். மேலும், விவசாயிகள் பயிரிடும் தானிய வகைகள், பயிருக்கு தேவையான உரங்கள் ஆகியவற்றை டிராக்டர், வேன் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். இச்சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்து, மண் சாலையாக மாறியுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் சகதியாக மாறி விடுகிறது. இரு மாதங்களுக்கு முன் வேளாண் துறையின் சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் உலர் களத்துடன் கூடிய தானியங்கள் தரம் பிரிக்கும் கூடம் இச்சாலையோரம் கட்டப்பட்டது. மண் சாலையாக உள்ளதால், இதனால், தானியங்கள் கொண்டு செல்ல விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.