உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி ரயில் நிலைய வளர்ச்சி பணி மந்தம் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருமா?

திருத்தணி ரயில் நிலைய வளர்ச்சி பணி மந்தம் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருமா?

திருத்தணி:திருத்தணி ரயில் நிலையத்தை, 15 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருத்தணி ரயில் நிலையத்தின் தரம் உயர்த்த அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆக., 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் திருத்தணி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரயில் நிலையத்தில் ஸ்கேட்டலர், லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம், பயணியர் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு ஒருவழியும், வெளியே செல்வதற்கு ஒரு வழியும் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், ரயில் நிலைய நுழைவாயிலில் முருகன் கோவில் கோபுரம் ஏற்படுத்தவும், அனைத்து பேருந்துகளும் ரயில் நிலையத்திற்கு உள்ளே வந்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. ரயில் நிலைய மூன்று நடைமேடைகளுக்கும் பயணியர் எளிதாக செல்வதற்கு மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்படும். இந்த வளர்ச்சி பணிகள் 120 நாட்களில் முடித்து, பயன்பாட்டிற்கு விட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. தற்போது, ரயில் நிலையத்தில் நுழைவாயில் நடைமேடைகளில் இருந்து பயணியர் வெளியேறுவதற்கு இரு வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, நடைமேடைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. ரயில் நிலைய வளர்ச்சி பணிகள் தொடர்ந்து காலதாமதமாக நடந்து வருவதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து, வளர்ச்சி பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, ரயில் பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ