உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கிராம சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வருமா?: சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்

 கிராம சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வருமா?: சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்

திருவாலங்காடு: மாவட்டம் முழுதும் கட்டப்பட்டுள்ள கிராம சேவை மையங்களில், பெரும்பாலானவை பாழாகி வருகின்றன. பூட்டிக்கிடக்கும் மையங்கள், இரவு நேரத்தில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூண்டி உட்பட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் தலா 10 கிராம சேவை மையங்கள் கட்டி முடிக்கப்பட்டன. பின் படிப்படியாக அனைத்து ஊராட்சிகளிலும் கட்டப்பட்டன. முதல் கட்டமாக 2013- -14ல் 13.12 லட்சம் ரூபாயிலும், இரண்டாம் கட்டமாக 2014- -15ல் 14.43 லட்சம், 2015- -16ல் 17 லட்சம் ரூபாயிலும், கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டன.பணி முடிந்ததும் இந்த மையங்களை, அந்தந்த ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து, செயல்படுத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, கிராம சேவை மையங்களில் கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரின்டர், இன்டர்நெட் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தி, குறைந்த கட்டணத்தில் ஆதார் கார்டில் மாற்றம், ஆதார் எண்ணை மற்ற சேவைகளுடன் இணைத்தல் மற்றும் வருவாய் துறை சான்றுகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தும் நோக்கத்திற்காக இந்த மையங்கள் கட்டப்பட்டன. ஆனால், மாவட்டத்தில் உள்ள, 90 சதவீத ஊராட்சிகளில் உள்ள கிராம சேவை மையங்கள் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கின்றன.கட்டி முடிக்கப்பட்டு ஆறு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை செயல்படாமல் உள்ளதால், கட்டடங்கள் பழுதடைந்து பாழாகி வருகின்றன.இதனால், அரசின் நிதி பல கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சான்றுகள் பெற கிராம மக்கள் நகர்ப்புறங்களுக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது.மாவட்டத்தில் பல இடங்களில் கிராம சேவை மைய கட்டடங்கள் ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் கட்டப்பட்டுள்ளன. பயன்பாட்டிற்கு வராத அவை பூட்டியே கிடப்பதால், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளன. மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விரைவில் அந்தந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்