விளாத்திகுளம்:விளாத்திகுளத்தில் நடந்த கட்டுமான தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்க தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஏஐடியூசி., அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் குணசீலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேது, மாநில மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் லட்சக்கணக்கான கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், கட்டட தொழிலாளர் நலவாரியத்தை சீரமைக்க வேண்டும், முடக்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் உரிமைகள் மீண்டும் வழங்க கோரியும், ஈஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த கோரியும் வரும் 30ம் தேதி வி.ஏ.ஓ.,அலுவலங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், சூரங்குடி, லெட்சுமிபுரம், கரிசல்குளம் உட்பட மாவட்டத்தில் 100 இடங்களில் பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் செங்கல் தொழிலாளர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பெரியசாமி, கல் உடைக்கும் தொழிலாளர் சங்க தாலுகா பொறுப்பாளர் அன்புராஜ், கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அப்பணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.