துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, 5 லட்சத்து 40,729 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 ஓட்டுகளும், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற த.மா.கா, வேட்பாளர் விஜயசீலன் 1,22,380 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் 1,20,300 ஓட்டுகளும் பெற்றனர்.ஓட்டு எண்ணிக்கையின் போது, துாத்துக்குடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன், மாதா கோவில் தெரு பகுதியை உள்ளடக்கிய காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச் சாவடியில் அ.தி.மு.க.வுக்கும், த.மா.கா.வுக்கும் தலா ஒரு ஓட்டு மட்டுமே பதிவாகியிருந்தன.மொத்தமுள்ள 432 ஓட்டுகளில், தி.மு.க.வுக்கு 350 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சிக்கு 75 ஓட்டுகளும் கிடைத்தன. மற்ற ஓட்டுகள் சுயேட்சை வேட்பாளர்களுக்கு கிடைத்தன. ஒரு ஓட்டுச் சாவடியில் ஒரேயொரு ஓட்டு மட்டுமே கிடைத்திருப்பது அ.தி.மு.க., மற்றும் த.மா.கா.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.