உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கோயிலில் குவிந்த பக்தர்கள்; 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருச்செந்துார் கோயிலில் குவிந்த பக்தர்கள்; 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தற்போது, தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.கோவில் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. 4:30க்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர்.பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், 100 ரூபாய் கட்டன தரிசனத்தில் நின்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்துார் நகர் பகுதி முழுதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூடுதலாக அமைத்துக் கொடுக்க கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 பெண்களுக்கு கால் முறிவு

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்பு முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த ரூபினி, 65, என்ற பெண் கடலில் நீராடும் பொழுது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவராஜா, சுதாகர், சரவணன், ராமர், இசக்கிமுத்து ஆகியோர் உடனடியாக கடலுக்குள் இறங்கி அந்த பெண்ணை மீட்டனர்.சிறிது நேரத்தில் கோயம்புத்துாரை சேர்ந்த துளசி அம்மாள், 50, என்ற பெண்ணுக்கும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். பொள்ளாச்சியை சேர்ந்த வசந்தாமணி, 65, என்ற பெண்ணுக்கும் காலில் அடிபட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.அவர்களையும் மீட்ட கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கோவில் பேட்டரி கார் உதவியுடன் முதலுதவி மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தடுத்து காயமடைந்த மூன்று பெண்களும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி