| ADDED : ஜூன் 07, 2024 08:12 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை, 51. கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன்கடை நடத்தி வந்தார். மேல பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65. இருவரும், மீன்கடையில் இரவு நேரத்தில் தங்குவது வழக்கம். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு இருவரும் துாங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்களை அரிவாளால் வெட்டி தப்பியோடினர். ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயும், வெள்ளத்துரை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, இருவரது உறவினர்களும் அரசு மருத்துவமனை முன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் பேச்சு நடத்தி, கலைத்தனர். போலீசார் கூறியதாவது:மீன் வியாபாரி வெள்ளைத்துரைக்கும் அவரது கடை அருகே இறைச்சி கடை நடத்தி வரும் இனாம் மணியாச்சியை சேர்ந்த கார்த்திக், 32, என்பவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்தது. இதன் காரணமாக கார்த்திக், அவரது நண்பர்களான இருவருடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மூவரையும் பிடித்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.