| ADDED : ஜூலை 28, 2024 02:51 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், டெலிகிராம் ஆப்பில், ஆன்லைன் வேலைவாய்ப்பில் பணம் சம்பாதிக்கலாம் என்ற செய்தியை அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பிய லிங்க்கில், 'எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக் ஷன் சைட்ஸ் அண்ட் பில்டிங்' பெயருக்கு, 'ரிவ்யூ' கொடுப்பதால் பணம் சம்பாதிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.தொடர்ந்து, அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர்கள், 'இன்டெக்ட்' என்ற இணையதளத்தில் முதலீடு செய்வதால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினர். நம்பி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு தவணைகளாக, 55 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். லாபம் எதுவும் கிடைக்காததால், மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தவர் துாத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார்.சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீசார், தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தினர். குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த ஜேய் சவாலியா, 24, மிலப் தக்கர், 22, ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார் சூரத் சென்று இருவரையும் கைது செய்தனர்.