ரொம்ப டென்ஷனா இருக்குப்பா ரோட்டில் ரவுசு காட்டிய மப்பு
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வீரையன், 52. இவர், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி சென்றுவிட்டு, அரசு பஸ்சில் ஊர் திரும்பினார். போதையில் இருந்த அவர் ஊருக்குச் செல்லாமல், கரிசல்குளத்தில் இறங்கினார்.போதை உச்சத்தில் இருந்த அவர், திடீரென நடுரோட்டில் ஹாயாக படுத்துக்கொண்டு, மொபைல் போனில் வீடியோ பார்க்க துவங்கினார். அவரது அலப்பறையால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.சிலர் வாகனங்களை நிறுத்தி, வீரையனை அப்புறப்படுத்த முயன்றனர்.அவர்களிடம் தகராறு செய்த அவர், 'எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்குப்பா... அதனால தான் ரோட்ல படுத்திருக்கேன்' என, ரவுசு காட்டியுள்ளார். 'வாகனம் ஏறினால் என்ன செய்வீர்கள்?' எனக் கேட்டதற்கு, 'என் மேல வண்டியை ஏற்ற முடியாது' எனக் கூறினார்.ஒரு கட்டத்தில், வீரையனை குண்டுக்கட்டாக துாக்கி, அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பில் அவரை படுக்க வைத்தனர். போதையில் வீரையன் செய்த கலாட்டாவால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.