| ADDED : ஜூன் 06, 2024 12:23 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா கட்டாலங்குளம் சேர்ந்த சுப்பையா மனைவி பிரமு, 60. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆப்பரேஷன் நடந்தது. வாரம் மூன்று நாள்கள் மருத்துவமனைக்கு வந்து மாத்திரைகள் வாங்கி செல்வதை, அந்த பெண் வழக்கமாக கொண்டுள்ளார். மே 31ல் துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த பிரமுவிடம், அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் உதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார். சிகிச்சைக்கு செல்லும் போது கழுத்தில் நகைகளை அணியக் கூடாது என கூறிய அந்த நபர், பிரமு அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை வாங்கி உள்ளார். மருத்துவமனைக்குள் சென்று திரும்பியதும், அந்த நபரை தேடியபோது அவர் மாயமாகிவிட்டார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண், தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், மூதாட்டி பிரமு நேற்று மனு அளித்தார்.துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களை, இதுபோல நுாதன முறையில் ஏமாற்றும் கும்பலை போலீசார் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.