உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆன்மிக மணம் வீசவேண்டிய செந்தூர் கோயில் கடற்கரையில் துர்நாற்றம்

ஆன்மிக மணம் வீசவேண்டிய செந்தூர் கோயில் கடற்கரையில் துர்நாற்றம்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கழிப்பறை செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு. மேலும் கடற்கரையில் அமைந்த ஸ்தலம் என்ற தனி சிறப்பு உண்டு. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு நடக்கும் சூரசம்ஹார திருவிழா உலகப்புகழ்பெற்றது. சூரசம்ஹார விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் வந்துசெல்வர். இதைப்போல் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சூரசம்ஹார விழாவில் சாமிதரிசனம் செய்வர். இதனையொட்டி பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் அடிப்படை வசதிகளை பல கோடி ரூபாய் மதிப்பில் செய்து வருகிறது. மேலும் கோயில் சுற்றுபுறங்களும் சுகாதாரமாக வைக்க சுமார் 300 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து சுத்தப்படுத்தி வருகிறார்கள். பக்தர்களின் வசதி கருதி திருச்செந்தூர் கோயில் வளாகங்களில் இலவச கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கால் வைக்க முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடா இருந்த திருச்செந்தூர் தற்போது பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சுகாதாரமான ஆன்மிக தலமாக மாறிவருகிறது. ஆனால் மீண்டும் பழைய படி சுகாதார சீர்கேடுகள் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. தற்போது சில நாட்களாக இந்த கழிப்பறையில் உள்ள கழிவுகளை செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் கோயில் வாகனத்தில் உறிஞ்சு எடுத்து அந்த கழிவுகளை கடற்கரையில் வாகனங்கள் நிறுத்த போடப்பட்டுள்ள பிளாட்பாரத்தின் மழைநீர் வெளியேறி கடலில் கலக்கும் குழாய்களில் விடுகின்றனர். இந்த கழிவுகள் கடற்கரை மணலில் கொட்டி சுகாதார சீர்கேட்டை உண்டு பண்ணும் சூழல் உருவாகிறது. புனித நீராடும் கடலில் மனித கழிவு கொட்டுவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். அதுமட்டுமல்ல வெளியூரில் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை நேரங்களில் தங்கள் குழ ந்தைகளுடன் கடற்கரை மணல் உட்கார்ந்து கடல் அழகையும்,கோயில் அழகையும் ரசித்தப்படியே கடல் காற்றை வாங்கிகொண்டிருப்பர். ஆனால் தற்பொழுது மனித கழிவுகளை பக்தர்கள் உட்கார்ந்து இருக்கும் கடற்கரையிலே கொட்டுவதால் துர்நாற்றம் தாங்கமுடியாமல் பக்தர்கள் கடற்கரைக்கு வருவதில்லை. கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனித கழிவுகளை கடற்கரையில் கொட்டாமல் பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயத்தை தடுப்பதுடன் கடலின் புனிதத்தையும் கெடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ