| ADDED : செப் 23, 2011 01:04 AM
வல்லநாடு : வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றிலுள்ள மருதூர் அணைக்கட்டை
தூர்வாரி ஆழப்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர். பொதிகை மலையில் உற்பத்தியாகி வரும் தாமிரபரணி ஆற்றின்
மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வரும் பல ஆயிரம் ஏக்கர்
விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இது மட்டுமின்றி நெல்லை,
விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதி
மக்களுக்கும் தாமிரபரணி தண்ணீர் தான் குடிநீராக இருந்து வருகிறது. வல்லநாடு
அருகே தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்
மூலமாக தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
தாமிரபரணி ஆற்று தண்ணீரின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
நிலையில் போதிய மழையின்மை, ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை
மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தாமிரபரணியின் தண்ணீர்
வரத்து குறைந்து கொண்டே வருகிறது. அத்துடன் பெருகிவரும் தொழிற்சாலைகள்,
குடியிருப்புகளால் தாமிரபரணி தண்ணீர் சாக்கடை கழிவுகள் கலந்து மாசடைந்தும்
வருகிறது. ஆண்டுகள் பல ஆகியும் இன்று வரை பராமரிக்கப்படாத ஸ்ரீவைகுண்டம்,
மருதூர் அணைக்கட்டுகளால் தாமிரபரணி ஆற்றில் வரும் அதிகப்படியான தண்ணீர்
வீணாக கடலுக்கு செல்கிறது. வல்லநாடு அருகேயுள்ள மருதூர் அணைக்கட்டு
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். மருதூர் அணைக்கட்டில்
இருந்து மேலக்கால், கீழக்கால் பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர்
ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக பிரித்து
கொடுக்கப்படுகிறது. மேலக்கால் மூலமாக வசவப்பபுரம், செய்துங்கநல்லூர்,
கருங்குளம் உள்ளிட்ட பகுதி விவசாயிகளும், கீழக்கால் மூலமாக வல்லநாடு,
மணக்கரை, நடுவக்குறிச்சி, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம் உள்ளிட்ட
பல்வேறு பகுதி விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். மேலக்கால்,
கீழக்கால்களுக்கு தண்ணீரை பிரித்து அனுப்பும் மருதூர் அணைக்கட்டு போதிய
பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தூர்ந்து போய் மண்மேடாகிவிட்டது. அத்துடன்
அணையின் உட்பகுதியில் வேலிக்காத்தான், அமலை மற்றும் காட்டுச்செடிகள்
வளர்ந்து காடுபோன்று காட்சி அளிக்கிறது. அணையின் கரைகள் ஆங்காங்கே உடைந்து
சேதமாகியும் உள்ளது. மண்மேடுகளால் அணை குட்டை போல காணப்படுகிறது. அணை
மண்மேடாகி விட்டதால் ஆற்றில் தண்ணீர் அதிகப்படியாக வரும் காலங்களில்
அணையின் உட்பகுதியில் போதியளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால்
தண்ணீர் வீணாக சென்று வெளியே சென்றுவிடுகிறது. வீணாகும் தண்ணீரை
விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத காரணத்தினால் கோடை காலத்தில் பல ஆயிரம்
ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் வாழைகள் தண்ணீரின்றி கருகும் நிலை
ஆண்டுதோறும் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆற்றில் தண்ணீர் ஓட்டம் குறைந்து
விடுவதால் குடிநீருக்கான உறைகிணறுகளிலும் போதிய அளவு தண்ணீரை எடுக்க
முடிவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு குடிநீரை சீராக விநியோகிக்க முடியாத
நிலையும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்த்திட பராமரிப்பில்லாமல்
மண்மேடாகி கிடக்கும் மருதூர் அணைக்கட்டை உடனடியாக தூர்வாரி ஆழப்படுத்த
வேண்டும். அணையின் மேலக்கால், கீழக்கால்களையும் சீரமைக்க வேண்டும் என்று
விவசாயிகள் மற்றும் வல்லநாடு சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளனர்.