இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
துாத்துக்குடி:இலங்கைக்கு கடத்த முயன்ற, ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேம்பார் சோதனை சாவடியில், மரைன் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிவேகமாக சென்ற பொலிரோ பிக்அப் வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 32 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது. அந்த வாகனத்தின் டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தியர்புரம் ராஜேஷ், 52, என்பவரை போலீஸார் கைது செய்தனர். சிகரெட் பாக்கெட் மூட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடந்த இருந்தது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட் மூட்டைகளின் மதிப்பு சுமார் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்த னர்.