மாணவிக்கு இறந்து பிறந்த குழந்தையை புதைத்தவர் கைது
புதுக்கோட்டை:துாத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் இசக்கிராஜா, 19. இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் உறவினர்கள் என்பதால் நெருங்கி பழகினர். இதில் மாணவி கர்ப்பம் தரித்தார். சில நாட்களுக்கு முன், மாணவிக்கு வயிறு பெரியதாக தெரிந்ததால் பெற்றோர் சந்தேகமடைந்தனர். இதனால், இசக்கிராஜாவும், மாணவியும் சேர்ந்து நாட்டு மருந்து வாங்கி சாப்பிட்டனர். மாணவிக்கு, இறந்த நிலையில், ஏழு மாத பெண் குழந்தை பிறந்தது. இசக்கிராஜா, நேற்று தருவைகுளம் காட்டு பகுதியில், அந்த குழந்தையை புதைத்தார். மாணவிக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு அதிகம் இருந்ததால், அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கருக்கலைப்பு செய்த விவரத்தை கண்டுபிடித்து மாணவியிடம் கேட்டுள்ளனர். புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், இசக்கிராஜாவை கைது செய்தனர்.