மனைவி தலையை துண்டித்து கொன்ற போலீஸ்காரர் கைது
துாத்துக்குடி:மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர், சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 37; மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர், கடந்த 31ம் தேதி மனைவி உமா மகேஸ்வரி, 33, மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், உமா மகேஸ்வரியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். தன் இரண்டு குழந்தை களையும் ஏரலில் உள்ள மாமனார் வீட்டில் விட்டு தப்பியோடினார். ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, உமா மகேஸ்வரி உடலை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சென்னை சென்ற தமிழ்செல்வன், தனியார் செய்தி சேனல் அலுவலகத்தை அணுகி, குற்றம் குறித்து பகிரங்மாக பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சேனல் ஊழியர்கள், தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் தமிழ்செல்வனை கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவர் துாத்துக்குடி மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.