ஆட்டோ டிரைவர் கொலை உறவினர்கள் போராட்டம்
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் மாரிசெல்வம், 31; ஆட்டோ டிரைவர். வேலைக்கு சென்ற மாரிசெல்வம், நேற்று காலை சண்முகாநகர் சுடுகாட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கோவில்பட்டி கிழக்கு போலீசார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி மாரிசெல்வம் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர். சிலர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக மாரிசெல்வம் குடும்பத்தினர் தெரிவித்தனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார், அவர்களை அனுப்பி வைத்தனர். மாரிசெல்வம் கொலை தொடர்பாக இரண்டு இளம் சிறார் உட்பட மூன்று பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.