திருச்செந்துாரில் திடீர் கடல் அரிப்பு
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் முன்பு கடற்கரையில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்த பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படும். சில நேரங்களில் கடற்சீற்றம் ஏற்படுவதால் கரைகளில் அரிப்பு ஏற்படுவது உண்டு. இந்நிலையில், கோவில் முன்புள்ள கடற்கரையில் சில நாட்களாக அதிகளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.கடற்கரையில், 25 அடி நீளத்திற்கு, 10 அடி ஆழத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து பக்தர்கள் கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அதிக அளவிலான கற்கள் உள்ளதால், பக்தர்கள் நீராட இயலாத சூழல் உள்ளது.கோவில் கடற்கரை பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும், நீராட வரும் பக்தர்கள் குடும்பத்தோடு நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களை போலீசாரும், கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் எச்சரித்து அனுப்பினர்.இந்நிலையில் நேற்று மாலை திருச்செந்துார் கடல் 80 அடிக்கு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.