கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் உறவினர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலியில் கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபால் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலியில் ஜூலை 27 ல் நடந்த கவின் ஆணவக் கொலையில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் இருவரையும் காவலில் எடுத்து இரண்டு நாட்கள் விசாரித்தனர். சம்பவம் நடந்த அன்று கொலைக்குப் பிறகு சுர்ஜித் டூவீலரில் துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சென்றுள்ளார். அவரது தாயார் கிருஷ்ணகுமாரியின் அக்கா வீடு அங்கு உள்ளது. அக்கா மகன் ஜெயபால் 30, கிரஷர் குவாரி நடத்தி வருகிறார். அவரிடம் சுர்ஜித் அடைக்கலம் அடைந்தார். பிறகு அவர் தந்தை சரவணன் மூலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் சுர்ஜித்திற்கு அடைக்கலம் தந்த ஜெயபாலை, போலீசார் கைது செய்தனர். இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு நேற்று மாலை திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித், தந்தை சரவணன் மற்றும் ஜெயபாலை ஆஜர்படுத்தினர்.