நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடி முற்றுகை
துாத்துக்குடி:நீதிமன்ற உத்தரவை மீறி கட்டணம் வசூல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாத்துக்குடி புதுார் பாண்டியாபுரத்தில் உள்ள சுங்கச்சாவடியில், லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.துாத்துக்குடி -- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதுார் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதையும் மீறி நேற்று காலை வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் எதிர்ப்பு கிளம்பியது.காலை 8:00 மணிக்கு லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், லாரிகளை சுங்கச்சாவடியில் அனைத்து கவுண்டர்களையும் மறித்து நிறுத்தி முற்றுகையிட்டனர். இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் எனக்கூறி சுங்கச்சாவடி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், துாத்துக்குடி மாநகராட்சி மேயரும், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான ஜெகன் பெரியசாமி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினார். நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன் சுங்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.