உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தமிழ்நாடு சட்டமுறை எடையளவு அபராதத்தில் மாற்றம் விதிமுறைகளை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை

தமிழ்நாடு சட்டமுறை எடையளவு அபராதத்தில் மாற்றம் விதிமுறைகளை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை

தூத்துக்குடி : தமிழ்நாடு சட்டமுறை எடையளவுகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆய்வாளர் மற்றும் சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி சுடலைராஜ் தெரிவித்துள்ளார். தொழிலாளர் ஆய்வாளர் மற்றும் சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி(பொறுப்பு) சுடலைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; அகில இந்திய அளவில் 2009ம் ஆண்டு சட்டமுறை எடையளவுகள் சட்டம் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக 1976ம் ஆண்டு தரப்படுத்தப்பட்ட எடையவுகள் சட்டம் மற்றும் 1989ம் ஆண்டு தமிழ்நாடு தரப்படுத்தப்பட்ட எடையளவுகள் விதிகளும் நடைமுறையில் இருந்தது. அவைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டு 1-4-2009 முதல் 2009ம் ஆண்டு சட்டமுறை எடையளவுகள் சட்டத்துடன் 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமுறை எடையளவுகள் விதிகள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எடைகள், அளவைகள், நிறுக்கும் மற்றும் அளக்கும் கருவிகளை முத்திரையிடுவதற்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சட்ட விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வியாபாரிகளுக்கும் ஒரே மாதிரியான அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவைகள் மெட்ரிக் முறையின் படியிலான கிலோ கிராம், லிட்டர், மீட்டர் போன்ற அலகுகளின் அடிப்படையிலானவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவைகள் தவிர தரப்படுத்தப்படாத அலகுகளான பவுண்ட் படி, அங்குலம் போன்ற அலகுகளின் அடிப்படையிலான எடையளவுகளை பயன்படுத்துதல் முரண்பாடாகும். இந்த முரண்பாடுகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வகையான தரப்படுத்தப்படாத எடையளவுகளை தயாரிப்பது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கதக்க முரண்பாடாகும். எந்தவொரு அறிவிப்பிலோ, விளம்பரத்திலோ, விற்பனை அல்லது கொள்முதல் ரசீதிலோ அல்லது பொட்டலப் பொருட்களின் மீது குறிப்பிடப்படும் எடை அல்லது அளவு விபரங்களிலோ தரப்படுத்தப்படாத எடை அல்லது அளவைகளில் விபரங்களை குறிப்பிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குறிப்பிட்ட எடை அல்லது அளவுக்கு குறைவாக பொருளை வழங்குவது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கதக்க குற்றமாகும். மின்னணு தராசு, வில் தராசு, செமி செல்ப் இன்டிகேட்டிங் தராசு, மேடை தராசு, எடைப்பாலங்கள், டீசல், மண்ணெண்ணெய், பெட்ரோல் வழங்கும் இயந்திரக் கருவிகள், விட்ட தராசுகள், மேஜைத்தராசு, எடையளவு கற்கள், அளவைகள், நீட்டல் அளவுகள் போன்றவைகள் மறுபரிசீலனை செய்து முத்திரையிடாமல் பயன்படுத்தினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான முத்திரையிடப்பட்டதற்கான சரிபார்ப்பு சான்றை வியாபார நிறுவனத்தில் வெளியில் தெரியும் படி வைத்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக் தராசு உபயோகிப்போர், முத்திரையிடப்பட்ட தகட்டினை தராசு உடன் இணைத்து வைத்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக் தராசை பயன்படுத்துவோர் அதன் துல்லியத்தை பரிசோதிக்க அதன் முழு திறனில் 10ல் ஒரு பங்கு அல்லது ஒரு டன் இதில் எது குறைவோ அந்த அளவுக்கு சோதனை எடைக்கற்களை முறையாக முத்திரையிட்டு வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். முத்திரையிடப்படாத எடைகள், அளவைகள் விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எடையளவுகள் விற்பனையாளர், பழுதுபார்ப்பவர் மற்றும் தயாரிப்பாளர் தமக்கு வழங்கப்படும் உரிமத்தில் திருத்தம் செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொட்டலமிடப்பட்டு விற்கப்படும் பொருட்களின் மீது பெயர், முழு முகவரி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை போன்ற விபரங்கள் குறிப்பிடபடவில்லையெனில் 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குறிப்பிட்ட பொட்டலப் பொருட்களின் எடை அல்லது அளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக குறைவுபடுமாறு பொட்டலமிடப்பட்டிருந்தால் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதங்கள் முதன் முறையாக முரண்பாடுகளுக்கு மட்டுமே இசைந்து தீர்த்தல் மூலம் அலுவலகத்திலேயே வசூலிக்கப்படும். 2வது மற்றும் அதனை தொடர்ந்த முரண்பாடுகளுக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை