| ADDED : செப் 18, 2011 11:52 PM
கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சியில் சுயதொழில் செய்ய மானிய பாங்க் கடன் வழங்கப்படுவதாக கமிஷனர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் மூர்த்தி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோவில்பட்டி நகராட்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு பொன்விழா ஆண்டு நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய பாங்க் கடன் நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை பெற குடும்ப அட்டையுடன் நகராட்சி சுகாதார பிரிவை அணுகலாம். இத்துடன் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்படுகிறது. இதில் கம்ப்யூட்டர் பயிற்சி, செல்போன் சர்வீஸ், சமையல் கலை, எலக்ட்ரீசியன், பிட்டர், நர்சிங் உட்பட பல பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் கம்ப்யூட்டர் பயிற்சியில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன், பப்ளிகேஷன், கம்ப்யூட்டர் பராமரிப்பு, கணக்கு நிர்வாக பயிற்சி, அலுவலக நிர்வாகம் ஆகியவையும் கற்றுத்தரப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர், வறுமைக்கோடு பட்டியலில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள், ரேஷன் கார்டு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நகராட்சி சுகாதார பிரிவை 7 நாட்களுக்குள் அணுகலாம். மேலும் இப்பயிற்சியில் சேர விரும்பும் பயனாளிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்களாக இருக்கலாம் என்றும் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாமென்றும் கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் மூர்த்தி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.