| ADDED : செப் 28, 2011 12:41 AM
பசுவந்தனை : சுயநிதி கல்லூரிகளில் படிக்க முடியாத ஏழை மாணவர்கள் படித்து பட்டம் பெறும் வகையில் துவங்கப்பட்டதே மனோ கல்லூரி என காலச்சூழலில் புவி என்ற கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் பேசினார். பசுவந்தனை அருகேயுள்ள நாகம்பட்டி மனோ கல்லூரியில் நடந்த காலச்சூழலில் புவி கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். கருத்தரங்கம் பற்றிய நோக்கம் குறித்து பேராசிரியர் சேதுராமன் பேசினார். கருத்தரங்கத்தில் மரம், செடி, கொடி மற்றும் நிலம், நீர், காற்று போன்றவற்றையும் நாம் நாசப்படுத்தி வாழ்வதற்குரிய சூழ்நிலையை அழித்து வருகிறோம். நான்கு லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகளை கடந்த பூமி இன்றும் சொற்ப வருடங்களிலேயே சுற்றுசூழல் சீர்கேட்டினாலும், அணு ஆயுதங்களாலும் எதிர்காலம் கேள்விக்குறியான சூழ்நிலையில் உள்ளது. இவைகளை பாதுகாக்கும் பொறுப்பு இன்றைய இளைய தலைமுறையினருக்கே உள்ளது. மேலும் சுயநிதி கல்லூரிகளில் படிக்க முடியாத ஏழை மற்றும் விவசாய குடும்ப மாணவர்களும் படித்து பட்டம் பெறும் வகையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் மூலம் துவங்கப்பட்டதே மனோ கல்லூரியெனவும், தமிழ்துறை சார்பில் கரிசல் என்ற அமைப்பு துவங்கப்பட உள்ளதெனவும், இயற்கை பேரிடர் மேலாண்மை குறித்தும் கல்லூரி முதல்வர் பேசினார். தொடர்ந்து புவி வெப்பமாக்கப்படலும், காலநிலை மாற்றமும் என்ற தலைப்பில் ஜாசூல் மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிராஜன் மற்றும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறையும் படிப்பினைகளும் என்ற தலைப்பில் காந்திய வழி அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தனராஜ் ஆகியோர் பேசினர். பேராசிரியர்கள் சிவக்குமார், முத்துமாரி, குமாரிசெல்வி, ராஜீமுனியம்மாள் மற்றும் யசோதா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். முதலாம் ஆண்டு மாணவி வெண்ணிலா நன்றி கூறினார்.