உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையொட்டி
பக்தர்களின் வசதிக்காக 150 அரசு பஸ் மற்றும் பாதுகாப்பு பணியில் ஆயிரத்து
200 போலீசார் ஈடுபடுத்தப்படுவதாக தசரா திருவிழா ஆலோசனை கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா
தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. திருவிழாவை காண தமிழகம் முழுவதும்
இருந்தும் சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.
இச்சிறப்பு மிக்க திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வரும் அக்.6ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகள்
குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கோயில் கலையரங்கத்தில் நடந்தது.
திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., பொற்கொடி தலைமை வகித்தார். தாசில்தார்
வீராச்சாமி, துணை தாசில்தார் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில்
நிர்வாக அதிகாரி சங்கர் வரவேற்றார். கூட்டத்தில் குலசேகரன்பட்டணம்
இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உடன்குடி பஞ்.,யூனியன் பி.டி.ஓ.,முருகன்,
திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி நட்டார்ஆனந்தி, குலசேகரன்பட்டணம்
பஞ்.,தலைவர் தாய்குலம்பெருமாள், குலசேகரன்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலைய
டாக்டர் சண்முகநாதன், மருந்தாளுநர் ரோலண்ட் பீறீஸ், சுகாதார ஆய்வாளர்
ஜாண்ராஜா, மின்வாரிய வணிக ஆய்வாளர் கணேசன், போக்குவரத்து துறை டிவிஷனல்
மேனேஜர் கண்ணபிரான், உடன்குடி ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சிவலூர் சாரதி,
குலசை ஊராட்சி கழக செயலாளர் சங்கரலிங்கம், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
செல்வகுமார், பரமசிவம், பத்மா, சிதம்பரம் உட்பட ஏராளமான அதிகாரிகள்,
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் திருவிழாவில்
கடற்கரை பகுதியில் குடிநீர் மற்றும் பெண்களுக்கு கழிப்பிட வசதி மற்றும் உடை
மாற்றும் அறைகள் அமைப்பது குறித்தும், தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர்
வழங்குவது, தண்ணீர் பாக்கெட் ஐ.எஸ்.ஐ.முத்திரையுடன் உள்ள பாக்கெட்கள்
விற்பனை செய்ய கடைக்காரர்களிடம் வலியுறுத்துவது, பாதுகாப்பு, சுகாதாரம்,
மின்விளக்கு வசதிகள், போக்குவரத்து போன்ற விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் தங்களது துறை சம்பந்தமாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து
விளக்கினர். ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ., பொற்கொடி கூறுகையில்,
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் திருவிழாவில் பக்தர்களில் வசதிக்காக
விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,
மதுரை போன்ற ஊர்களில் இருந்து 1ம் திருவிழா, 10ம், 11ம் திருவிழா
நாட்களில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது போன்று பாதுகாப்பு
பணியில் ஆயிரத்து 200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் மப்டி
போலீசார், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா
பொருத்தப்படுகிறது. காப்பு கட்டி வேடம் அணியும் பக்தர்கள் கோயிலுக்கு வரும்
போது இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது. வருவாய்துறை
மூலம் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். சுகாதாரதுறை மூலம் 24 மணி
நேரமும் டாக்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு இலவசமாக
மருந்து, மாத்திரை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில்
கலைநிகழ்ச்சி நடத்துபவர்கள் அதிக அளவு பாக்ஸ் வைக்க கூடாது,
பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் அமைத்தால் அப்புறப்படுத்தப்படும் என
தெரிவித்தார். இறுதியில் கணக்கர் டிமிட்ரோ நன்றி கூறினார்