உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி அனல்மின் நிலைய தீ விபத்து; சேத மதிப்பை கணக்கிடுவதில் தாமதம்

துாத்துக்குடி அனல்மின் நிலைய தீ விபத்து; சேத மதிப்பை கணக்கிடுவதில் தாமதம்

துாத்துக்குடி : துாத்துக்குடி அனல் மின் நிலைய தீ விபத்து குறித்து, அதிகாரிகள் குழுவினர் ஆய்வை துவக்கி உள்ளனர். சேத மதிப்பை கணக்கிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல், மூன்று யூனிட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது யூனிட்டில் உற்பத்தி நடந்து வருகிறது. தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

3வது யூனிட் பகுதி

இருப்பினும், 1, 2வது யூனிட்களின் உள்ளே இன்ஜினியர்கள் குழுவினர் செல்ல முடியாத வகையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.அவர்களால் முறையாக கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் வரை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். முதல் இரண்டு யூனிட்களில் முழுமையான சேதமும், 3வது யூனிட் பகுதியில் கேபிள் ஒயர் சேதமும் ஏற்பட்டுள்ளது. ஆய்வு குறித்து ஆல்பி ஜான் வர்கீஸ், கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் நேற்று கூறியதாவது:தீ விபத்து சேத மதிப்பீட்டை கணக்கீடு செய்யவும், பழுதை நீக்கி மீண்டும் செயல்பட வைக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தீ முற்றிலும் அணைக்கப்பட்டாலும் வெப்பம் இன்னும் உள்ளதால், இன்ஜினியர் குழுவினர் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.மூன்றாவது யூனிட்டில் குறைவான பாதிப்பு உள்ளது. அதை உடனடியாக சரி செய்து, ஓரிரு வாரங்களில் மின் உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்று மற்றும் 2வது யூனிட்டில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. பாய்லர் டர்பைன் ஜெனரேட்டர் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

நடவடிக்கை

கேபிள் ஒயர் செல்லும் இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகே சேத மதிப்பு தெரியவரும். மிக விரைவில் உற்பத்தியை துவங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் இரு யூனிட்களை சரி செய்ய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாம்.துாத்துக்குடி அனல் மின் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயுட்காலம் முடிந்து விட்டதாக கூறுவதில், எந்த பிரச்னையும் இல்லை. ஊழியர்களை இடமாற்றம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை. மீண்டும் மின் உற்பத்தியை துவங்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சேத மதிப்பீடு கணக்கீடு முடிந்த பின், பழுது நீக்கும் பணி துவங்கும். கோடையில் மின் தட்டுப்பாடை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூடுவிழா?

துாத்துக்குடி அனல் மின்நிலைய முதலாவது யூனிட்டில், 1979ம் ஆண்டிலும், 2வது யூனிட்டில், 1980ம் ஆண்டிலும் உற்பத்தி துவங்கியது. பொதுவாக ஒரு அனல் மின் நிலையத்தின் அதிகபட்ச ஆயுட்காலம், 30 ஆண்டுகள் மட்டுமே. மின்தேவையை கருத்தில் கொண்டு பராமரிப்புக்கு கூடுதலாக கோடி கணக்கில் ஒதுக்கீடு செய்து துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அடிக்கடி பழுது காரணமாக மின் உற்பத்தியில் தொய்வு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளை கடந்த முதல் 2 யூனிட்களிலும் மீண்டும் சரி செய்வது கஷ்டம் என்பதால் துாத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதல் 2 யூனிட்களையும் மூடவே அதிக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி