கோவில்பட்டி : கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் நாடார் பள்ளி 27 கோப்பைகள் வென்று புதிய சாதனை படைத்தது. கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் 2011-12ம் தேதி கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. ஓட்டப்பிடாரம் மெக்கவாய் மேல்நிலைப்பள்ளி சார்பில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி, வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழமுடிமன் புனிதவளன் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி தருவை மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர் வாலிபால், பீச்வாலிபால், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், மேசைப்பந்து ஒற்றையர் இரட்டையர் மாணவிகள் ஹேண்ட் பால், மேசைப்பந்து இரட்டையர், இறகுப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் 17வயது வாலிபால், ஹேண்ட்பால், மேசைப்பந்து ஒற்றையர் மாணவிகள் ஹேண்ட்பால், டென்னிகாய்ட் ஒற்றையர், 19 வயது மேசை மற்றும் இறகுப்பந்து ஒற்றையர், இரட்டையர், மாணவிகள் ஹேண்ட்பால், இறகுப்பந்து இரட்டையர் டென்னிகாய்ட் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றனர். மேலும் 19 வயது ஹேண்ட்பால் மாணவி இறகுப்பந்து ஒற்றையர் இரட்டையர் மேசைப்பந்து ஒற்றையர் இரட்டையர் டென்னிகாய்ட் இரட்டையர் 17வயது கால்பந்து ஆகியவற்றில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றது. தவிர 143 புள்ளிகள் குழுவிளையாட்டிலும், 163 புள்ளிகள் பெற்று குழு மற்றும் தடகள போட்டிகளில் சிறந்த பள்ளியாக தேர்வு பெற்று அதற்கான வெற்றிக் கோப்பைகளை தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சிரோன்மணி சந்திராவிடம் பெற்றுள்ளனர். மேலும் 27 வெற்றிக் கோப்பைகள் பெற்று கல்வி மாவட்டத்தில் புதிய சாதனை படைத்தனர். இம்மாணவர்களுக்கும் பயிற்சியளித்த ஆசியர்களுக்கும் நேற்று முன்தினம் (செப்.21) பாராட்டு விழா நடந்தது. கோவில்பட்டி பசுவந்தனை ரோடு காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்க தலைவரும், பள்ளி செயலாளருமான பழனிச் செல்வம் தலைமை வகித்தார். உறவின்முறைச் சங்க துணைத்தலைவர் நாகரத்தினம், செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி பொருளாளர் ஜெயபாலன் வரவேற்றார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், வரதராஜன், சசிக்குமார், சுதாகர், வேதசிகாமணி ஆகியோரை நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி பலர் பேசினர். தலைமை ஆசிரியர் லூயிஸ் இன்பராஜ் நன்றி கூறினார். விழாவில் பள்ளி நிர்வாக்குழு உறுப்பினர்கள் குட்டிரத்தினராஜா, திருப்பதி ராஜா, செல்வராஜ், தங்கராஜ், செல்வராம், சத்தியமூர்த்தி, ஆபிரகாம் அய்யாத்துரை சின்னமாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.