| ADDED : செப் 24, 2011 01:50 AM
தூத்துக்குடி : தமிழக அரசு கள் இறக்க விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று பனைத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்க கூட்டம் அடைக்கலாபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பனை, தென்னை தொழிலாளர் சங்க துணைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். அந்தோணி சிலுவை முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ரவி, மகளிர் அணி தலைவி வள்ளியம்மாள், செயலாளர் வசந்தா லோகநாதன், மைக்கேல், தங்கராஜ், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு கள் இயக்கம் கள் இறக்க அனுமதி கோரி விரைவில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைபெறும் நடைபயணத்தில் பனை, தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும். பனை, தென்னை தொழிலாளர்கள் தமிழகத்தில் வாழ்வாதாரமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து அடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்துக்கு திரும்பவும், மறுவாழ்வு பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையின் போது கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறிய அறிவிப்பினை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.