திருப்பத்துார்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்காக ஒட்டப்பட்ட போஸ்டரில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு பதிலாக, நடிகர் அரவிந்த்சாமி படம் இருந்ததால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனுார், அ.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில், பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாதனுார் அடுத்த கீழ்மிட்டாளம், அ.தி.மு.க., கிளை கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு பதிலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான, 'தலைவி' படத்தில், எம்.ஜி.ஆர்., கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை வைத்திருந்தனர். இந்த படம் வைரலானது.நேற்று காலை, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட, அ.தி.மு.க.,வினர் வந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர்., படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி படம் இருப்பதை கண்டு, நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுதாரித்து கொண்ட அ.தி.மு.க, வினர், நடிகர் அரவிந்த்சாமி படத்தின் மீது, எம்.ஜி.ஆர்., நடத்தை ஒட்டி, அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.