திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, தேர்வு எழுத பைக்கில் சென்ற மாணவி, லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார். சக மாணவி, மாணவர் படுகாயமடைந்தனர். திருப்பத்துார் மாவட்டம், சி.கே.ஆசிரமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 20. இவர், கரியம்பட்டியிலுள்ள திருவள்ளூர் கலைக்கல்லுாரியில் படிக்கிறார். அரியர் தேர்வு எழுத நேற்று காலை, 8:00 மணியளவில், பைக்கில் சென்றார். அப்போது, உடன் படிக்கும் தோழிகளான, ஜெய் பீம் நகரை சேர்ந்த பிரியங்கா, 18, ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்த ரம்யா, 18, ஆகியோரையும் அழைத்து சென்றார். கந்திலி அருகே, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது, எதிரே வந்த மற்றொரு பைக், சக்திவேல் பைக் மீது லேசாக உரசியதில், நிலை தடுமாறி மூவரும் விழுந்தனர். இதில், ரம்யா, லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சக்திவேல், பிரியங்காவை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கந்திலி போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பிடித்து விசாரிக்கின்றனர்.