சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 22 ஆண்டு சிறை
திருப்பத்துார்:விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த, பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சையத் லியாகத் அலி, 52. இவர், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரில் வாடகை வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த, 2022 அக்., 7ல், 4 வயது சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை, வாணியம்பாடி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம் மாலை, சையத் லியாகத் அலிக்கு, 22 ஆண்டுகள் சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேஸ்திரிக்கு '5 ஆண்டு'
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய வெங்கட சமுத்திரம் பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி விஜயன், 54. இவர் 2020 டிச., 12ல், 6 வயது சிறுமியை, வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி கூச்சலிட்டதை கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்ததால், விஜயன் தப்பினார். உமராபாத் போலீசார், விஜயனை போக்சோவில் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம் மாலை விஜயனுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.