வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
திருப்பத்துார்: நாட்றம்பள்ளி அருகே கூரை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில், மூதாட்டி சிக்கி உயிரிழந்தார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயனத்தியூர் பதியை சேர்ந்தவர் பெரியக்காள், 70. இவருக்கு, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசிக்கின்றனர். கணவனை இழந்த பெரியக்காள், கூரை வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், இவரது கூரை வீட்டின் மண் சுவர், நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய பெரியக்காள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாட்றம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.