உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும் 15ல் "கன்ஸ்ட்ரோ கண்காட்சி துவங்குகிறது :சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தகவல்

வரும் 15ல் "கன்ஸ்ட்ரோ கண்காட்சி துவங்குகிறது :சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தகவல்

திருப்பூர் : 'மரம், மணல், சிமென்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு மாற்று பொருட்களை அறிமுகப்படுத்தும் வகையில், திருப்பூரில் நடைபெறும் 'கன்ஸ்ட் ரோ 2011' கட்டுமான பொருட்கள் கண்காட்சி அமையும்,' என, சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் என்ற கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. கட்டுமான துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், 'கன்ஸ்ட்ரோ' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது; இவ்வாண்டு கண்காட்சி, வரும் 15ம் தேதி துவங்குகிறது.அசோசியேஷன் தலைவர் தில்லைராஜன், கண்காட்சி தலைவர் பால்ராஜ் ஆகியோர் கூறியதாவது:கட்டடங்களுக்கு தேவையான பொருட்கள், தரமானதாக இருக்க வேண்டும். நவீன யுக்தியுடன், சிக்கனமாகவும், அழகுடனும் கட்டுவதற்கு கட்டட உரிமையாளர்களுக்கும், பொருட்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கும் பாலமாக இருப்பது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன். 'கன்ஸ்ட்ரோ' மெகா கண்காட்சி வரும் 15ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. வேலன் ஓட்டல் மான்ஸ்செஸ்டர் ஹாலில் நடக்கும் அக்கண்காட்சியை, கலெக்டர் மதிவாணன், எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.பல்வேறு நகரங்களை சேர்ந்த கட்டுமான பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், 102 ஸ்டால்களை அமைக்க உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருப்பூர் மக்களின் பாதுகாப்புக்காக, துருக்கி நாட்டில் இருந்து எட்டு முதல் 13 'லாக்' கொண்ட கதவுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. 'ஐ-லிவ்ஸ் டோர்' என்ற பெயருடன், இறக்குமதி செய்யப்படும் கதவுகள் கண்காட்சியில் இடம் பெறும். இரும்பு, அலுமினியம், பி.வி.சி., வகைகளில் இவ்வகை கதவுகள் கிடைக்கும். மரம், மணல், சிமென்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வால், கட்டுமான பணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. எனவே,விலை உயர்வை சந்தித்துள்ள கட்டுமான பொருட்களுக்கு மாற்று பொருட்கள் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன, என்றனர். செயலாளர் சிவன் பாலசுப்ரமணியம், பொருளாளர் ராஜசேகரன் உட்பட சங்க நிர்வாகிகள், கண்காட்சி கமிட்டியினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்