வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாதா கோவில் மணியோசை ... ஏசப்பா ரட்சிப்பாராக ...
திருப்பூர்:கேரளாவில் உள்ள வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருடி, திருப்பூர் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்னாள் மேலாளரை கைது செய்துள்ள போலீசார், 2.5 கோடி ரூபாய் மதிப்பு நகைகளை நேற்று அதிரடியாக மீட்டனர்.திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் மாதா ஜெயகுமார், 34. திருப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்தார். அப்போது, அவருடன் சந்திராபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், 29, என்பவர் வேலை செய்தார்; இருவரும் நண்பர்களாகினர்.பின், மாதா ஜெயகுமார், கேரள மாநிலம், கோழிக்கோடு, வடகரையில் உள்ள, 'பாங்க் ஆப் மஹாராஷ்டிரா' கிளையில் மேலாளராக பணிபுரிந்தார். கார்த்திக் திருப்பூரில், டி.பி.எஸ்., எனும் தனியார்நிதி நிறுவனத்தில், தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்தார்.வடகரை வங்கியில் நடந்த தணிக்கையின் போது, ஜெயகுமார் சிக்கினார். வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகளுக்குப் பதிலாக, போலி நகைகளை வைத்து, அசல் நகைகளை திருப்பூர் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக, தலைமறைவாக இருந்த ஜெயகுமார், சில நாட்களுக்கு முன் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.அவரிடம் கேரள போலீசார் விசாரித்த போது, திருப்பூரில் கார்த்திக் பணியாற்றும், டி.பி.எஸ்., நிதி நிறுவனத்தில் அந்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிந்தது.இதையடுத்து, பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள, அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளரை அழைத்துக் கொண்டு, வடகரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவில் திருப்பூர் வந்தனர்.அவிநாசி ரோடு புஷ்பா சந்திப்பு மற்றும் காங்கயம் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்த அந்த தனியார் நிதி நிறுவனத்தின் கிளைகளில், அவர் உண்மையான தங்க நகைகளை அடகு வைத்திருந்ததை ஏற்கனவே போலீசில் கூறி இருந்தார். அதனால், இரு கிளைகளிலிருந்தும், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 4.6 கிலோ நகைகளை நேற்று காலை பறிமுதல் செய்தனர். பின், மாதா ஜெயகுமாரை அழைத்துக் கொண்டு கேரளா புறப்பட்டனர். தலைமறைவாக உள்ள கார்த்திக்கை கேரள போலீசார் தேடி வருகின்றனர்.
மாதா கோவில் மணியோசை ... ஏசப்பா ரட்சிப்பாராக ...