உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வந்தார்கள்... சென்றார்கள் 2 ஆண்டில் 6 கமிஷனர்கள்

வந்தார்கள்... சென்றார்கள் 2 ஆண்டில் 6 கமிஷனர்கள்

திருப்பூர்;திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி அந்தஸ்து பெற்று, 2 ஆண்டு நிறைவடைவதற்குள், 6 கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த ஆண்டவன், செங்கல்பட்டு நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, அவருக்கும், நகரமன்ற தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்களுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. 'எங்களை, கமிஷனர் மதிப்பதே இல்லை' என கவுன்சிலர்கள் பகிரங்கமாகவே புகார் கூறினர்.சில கவுன்சிலர்களுக்கும், கமிஷனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் கூட ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம், நிர்வாகத்தில், மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டை அவர் விரும்பவில்லை என்ற நிலை தான் அங்கு தென்பட்டது. அவர் பதவியேற்று, 10 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, செங்கல்பட்டு நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படி மாற்றினால்...

n திருமுருகன்பூண்டி, 2ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என, கடந்த, 2021, ஆக.,24ல், தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. திருப்பூர் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முகமது சம்சுதீன், நகராட்சியின் முதல் கமிஷனராக, கடந்த 2021, டிச., மாதம் பொறுப்பேற்றார். 2022, நவ., வரை பணிபுரிந்த அவர், தென்காசி மாவட்டம், சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.n அதன்பின், பவானி நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த தாமரை, திருமுருகன்பூண்டிக்கு வந்தார். பணியில் இணைந்த அவர், நீண்ட விடுப்பில் சென்றார். தொடர்ந்து, வேறு நகராட்சிக்கு பணியிட மாற்றம் பெற்று சென்று விட்டார். ஒரு நாள் கூட, அவர் பூண்டி நகராட்சியில் பணியாற்றவில்லை.n இதனால், பணியிடம் நிரப்பப்படாத நிலையில், பல்லடம் நகராட்சி கமிஷனர் மோகன்குமார், பூண்டி நகராட்சி கமிஷனர் பணியிடத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார்.n 2023, ஜனவரியில், திருத்துறைப்பூண்டி நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரிஸ், பூண்டிக்கு மாற்றம் பெற்றார். அவர் பணி ஓய்வு பெற சில மாதம் மட்டுமே இருந்த நிலையில், ஜூலை மாதம் அவரும், சிவகங்கை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யபட்டார்.n அவருக்கு பதிலாக, திட்டக்குடி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த ஆண்டவன், பூண்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்போது, அவரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 2 ஆண்டு கூட முழுமை பெறாத நிலையில், 5 கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 6வது கமிஷனர் பொறுப்பேற்க உள்ளார்.

'கடமை'க்கு பணி

குறுகிய காலத்தில், முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்ந்துள்ள பூண்டியில், மக்களுக்கான குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரப் பணி, வரி விதிப்பு, அனுமதியற்ற குடிநீர் இணைப்பு, புதிய இணைப்பு வழங்குவது என, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நியமிக்கப்படும் கமிஷனர்களும், துணிச்சலான முடிவுகளை எடுக்காமல், 'கடமை'க்கு பணியாற்றி சென்று விடுகின்றனர்.அதிகாரிகள் மற்றும் நகரமன்றத்தினரிடையே ஒருமித்த கருத்தும், இணைந்து செயல்படும் சூழலும் அங்கு இல்லை. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்க உள்ள கமிஷனராவது, ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஆர்வம் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை