| ADDED : மே 31, 2024 01:39 AM
பல்லடம்;மாணிக்காபுரம் ஊராட்சியில், பொலிவிழந்து கிடக்கும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மீட்டு பராமரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மின் நகர் பகுதியில், அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இப்பூங்கா, போதிய பராமரிப்புகள் இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது. பூங்கா வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் செடி - கொடிகள் பசுமையை இழந்து காய்ந்து கருகி வருகின்றன.பொதுமக்கள் பயன்படுத்தும் இருக்கைகள், குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை துருப்பிடித்து வீணாகி வருகின்றன.இதேபோல், பூங்கா வளாகத்திலுள்ள உடற்பயிற்சி கூடம், பயன்பாடற்று குப்பைகள் மண்டி கிடக்கிறது. இங்குள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் உடைந்தும், துருப்பிடித்தும் காயலான் கடைக்கு செல்லும் பொருட்களாக காட்சியளிக்கின்றன.குழந்தைகள் விளையாடவும், பொதுமக்கள் நடைபயிற்சிகள் மேற்கொள்ளும் வகையிலும் பூங்காவை பராமரிக்க வேண்டும். இளைஞர்கள் உடல் நலனை பேணிக் காக்கும் வகையில் உடற்பயிற்சி கூடத்தை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.