மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் வழங்க பயனாளி தேர்வு முகாம்
04-Sep-2024
மகளிர் உரிமைத்தொகை பெற குவிந்த பெண்கள்
17-Aug-2024
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செயல்பாடுகளில் உள்ள குறைகளை களையக்கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்டு கூட்டத்தில், மாற்றுத்திறனாளி மகாதேவன் மனு அளித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளை மதிப்பதே இல்லை. நலத்திட்டங்களை பெறுவதற்காக, மாதக்கணக்கில் அலையவேண்டியுள்ளது. 10ம் தேதி ஆகியும் இன்னும், மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், மருத்துவ அடையாள அட்டை வழங்க மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுத்திறனாளிகள், கலெக்டர் அலுவலகத்துக்கு வருகின்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்தும், அடையாள அட்டை பெறுவவதற்காக காலை முதல் மாலை, 5:00 மணி வரை காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது. திங்களன்று நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் மற்றும் வெள்ளிக்கிழமை அடையாள அட்டை முகாமில் பங்கேற்க வரும் மாற்றுத்திறனாளிகளை, கலெக்டர் அலுவலக நுழைவாயிலிலிருந்து, கூட்ட அரங்கம் வரை அழைத்துவரவும், மீண்டும் கொண்டு விடவும் பேட்டரி வாகனம் இயக்கப்பட்டு வந்தது. பல மாதங்களாக வாகனத்தை இயக்காமல் வைத்துள்ளனர்.ஸ்கூட்டருக்கான நேர்காணலுக்கு, ஒரே நாளில், 200 பேரை வரவழைக்கின்றனர். ஆனால், போதிய முன்னேற்பாடுகள் செய்வதில்லை. உதவி உபகரணங்கள், வங்கி கடன் உள்பட மாற்றுத்திறனாளிகளின் ஆன்லைன் விண்ணப்பங்கள் கண்டுகொள்ளப்படாமல், மாதக்கணக்கில் கிடப்பில் போடுகின்றனர்.நல அலுவலகத்தில் பணிபுரியும் செயல்திறன் உதவியாளர், மாற்றுத்திறனாளிகளை மரியாதை குறைவாக பேசுகிறார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் இதை கண்டுகொள்வதில்லை. இது எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை, 5 ம் தேதிக்குள் வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள குறைகளை களைய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மகாதேவன் வேதனை தெரிவித்தார்.
04-Sep-2024
17-Aug-2024