பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படும் திருவிழா
உடுமலை: உடுமலை அருகே, பாரம்பரிய முறைப்படி, கொண்டாடப்படும் வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது.உடுமலை அருகே எரிசனம்பட்டி வல்லக்குண்டாபுரம் கிராமத்தில், பழமை வாய்ந்த வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல்வேறு பாரம்பரிய முறைகளை பின்பற்றி, திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது.மாசி மாத வளர்பிறையில் திருவிழா கொண்டாட தேதி நிர்ணயிக்கப்படுகிறது. திருவிழாவை அறிவிக்கும் முன், தரிசாக காணப்படும் விளைநிலத்தை துாய்மைப்படுத்தி, குறிப்பிட்ட சமுதாய மக்கள், நீர் தெளிக்கின்றனர். அவ்வாறு, நீர் தெளிக்கப்படும் இடத்தில், குறிப்பிட்ட நாட்களில், வேம்பு, ஆவாரை, புங்கன் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு செடி முளைவிடும். இதையடுத்து, திருவிழாவுக்கான சிறப்பு வழிபாடுகள் துவங்கும்.பின்னர், விளைநிலங்களுக்கு சென்று, கரும்பு எடுத்து வந்து, செடி முளைவிட்ட இடத்தில், கரும்பு பந்தலிட்டு, பச்சரிசி மாவில் மஞ்சள் கலந்து, கோலமிட்டு, அவ்விடத்தில், பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இந்தாண்டு திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது.