திருப்பூர்;திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்கள் பெரும்பாலானவை, குறு நிறுவனங்களே; நாட்டில் உள்ள குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக புதிய அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொழில்துறையினர் முன்வைத்துள்ளனர். தேர்வாக உள்ள புதிய திருப்பூர் எம்.பி., இதற்கு முனைப்பு காட்ட வேண்டும்; புதிதாக உருவாக உள்ள மத்திய அரசும் இதைச் செயல்படுத்த வேண்டும்.நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின்(எம்.எஸ்.எம்.இ.,) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்த முதலீட்டில் உருவாகும் நிறுவனங்கள், புறநகர் மற்றும் நகரப்பகுதியில், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.தமிழகத்தில் அனைத்து வகைத் தொழில்களிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. ஜவுளி, மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், தானியங்கி உபகரணங்கள், தோல் பொருட்கள், ரசாயனம், நெகிழி, ஆயத்த ஆடை என, பல்வேறு தொழில்கள் உள்ளன.தமிழகத்தில், 33.26 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டும், 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டைச் செய்துள்ளன. கடந்த, 2009-10ம் ஆண்டில், 41 ஆயிரத்து, 799 ஆக இருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பதிவு என்பது, இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. 11.10 கோடி வேலை வாய்ப்பு
நாட்டின், 73வது கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மட்டும், 49.48 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. சமூக பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. நாட்டின், 73வது கணக்கெடுப்பின்படி, 633.88 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 11.10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றன. தொழில் உச்சவரம்பு
குறு நிறுவனம் என்பது, ஒரு கோடி ரூபாய் முதலீட்டில், ஐந்து கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் நிறுவனம். முதலீடு 10 கோடி ரூபாயாகவும், பரிவர்த்தனை 50 கோடி ரூபாயாகவும் இருப்பது சிறு நிறுவனம். முதலீடு, 50 கோடி ரூபாயாகவும், பரிவர்த்தனை 250 கோடி ரூபாயாகவும் இருப்பது, நடுத்தர நிறுவனம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 'உதயம்' பதிவு
மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதயம் பதிவை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களையும், தொழில் மேம்பாட்டு திட்டங்களையும் அறிவிக்கிறது. இருப்பினும், அவற்றில் குறு, சிறு நிறுவனங்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்படுகிறது. 95 சதவீத குறுந்தொழில்கள்
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் குறு, சிறு தொழில்கள் வளர்ச்சி பெறவும், மேம்படவும், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பின்னலாடை தொழில் உட்பட, ஒவ்வொரு பிரிவிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொருபிரிவிலும், குறு நிறுவனங்கள் மட்டும், 95 சதவீதம் இயங்கி வருகின்றன. இனியாவது, குறு நிறுவனங்களுக்கு தனியே திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்; அதற்கு, மத்திய அரசில், குறு நிறுவனங்களுக்கு தனி அமைச்சரகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது, தொழில்துறையினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.
குறுந்தொழிலுக்கு தனி அமைச்சர்
இந்தியாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களே வளர்ச்சிக்கான காரணிகளாக உள்ளன. குறிப்பாக, லட்சக்கணக்கான தொழில் முனைவோரால், கோடிக்கணக்கான வேலை வாய்ப்பை வழங்குவது குறுந்தொழில்கள். ஆனால், 95 சதவீதம் அளவுக்கு குறுந்தொழில்கள் மட்டுமே உள்ளன. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம், பொதுவாக, எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டுக்காக இருக்கிறது. மெஜாரிட்டியாக இருக்கும் குறுந்தொழில் மேம்பட வாய்ப்புகள் குறைவு. குறிப்பாக, பின்னலாடைத் தொழிலை எடுத்துக்கொண்டாலும், 95 சதவீதம் குறு நிறுவனங்கள் உள்ளன.நாடு முழுவதும் உள்ள குறுந்தொழில்கள் வளர்ச்சி பெறவும், வேலை வாய்ப்பு, பொருளாதார கட்டமைப்பில் உயரவும், குறுந்தொழில்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதற்காக, புதிதாக அமைய உள்ள மத்திய அரசில், குறுந்தொழில்களுக்கு தனியே அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான், அடித்தட்டில் இருக்கும் குறுந்தொழில்கள் மேம்பட முடியும்.- மோகனசுந்தரம், தேசிய இணைப் பொதுச்செயலாளர், லகு உத்யோக் பாரதி. குறுந்தொழில்களில் சிறப்பு கவனம்மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களில், நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே அதிகம் பயனடைய முடிகிறது. உதாரணமாக, பி.எல்.ஐ.,(உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை) திட்டத்தில் நிபந்தனை கடுமையாக இருந்ததால், எதிர்பார்த்த அளவு, குறுந்தொழில்களுக்கு பலன் கிடைக்கவில்லை. நிபந்தனைகளை தளர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம்.குறுந்தொழில்களுக்கும், சிறு தொழில்களுக்கும் இடையே அதிகபட்ச வித்தியாசம் இருக்கிறது. குறுந்தொழில்களை வளர்த்தெடுக்க, மத்தியில் தனி அமைச்சர் வர வேண்டும். அப்போதுதான், மத்திய அரசின் சலுகைகள், அறிவிப்புகளால், குறுந்தொழில்கள் பயன்பெற முடியும்.- செந்தில்வேல், பொதுச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்(டீமா)*