உடுமலை : குடிமங்கலம் பகுதியில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கான சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில், உரங்கள் இருப்பு குறித்து வேளாண்துறையினர் ஆய்வு செய்து தட்டுப்பாட்டை தவிர்க்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், 15,500 ெஹக்டேர் பரப்பில், நீண்ட கால பயிராக தென்னையும், 6 ஆயிரம் ெஹக்டேர் பரப்பில், சீசனுக்கேற்ப மக்காச்சோளம், சோளம், கம்பு மற்றும் பயறு வகை பயிர்கள், காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல், தென்னை சாகுபடி பாதித்தது; இதர சாகுபடிகளும் அதிக பரப்பளவில் மேற்கொள்ளப்படவில்லை.இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, குடிமங்கலம் வட்டாரத்தில் பரவலாக பெய்துள்ளது; பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கும், விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, அனைத்து வகை சாகுபடி பணிகளும் தீவிரமடைந்துள்ளது.குறிப்பாக, காய்ப்புத்திறன் அதிகரிக்க, அனைத்து வகையான உரங்களையும் தென்னை மரங்களுக்கு இடத்துவங்கியுள்ளனர். மேலும், மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகளுக்கு, அடியுரமாக டி.ஏ.பி., மற்றும் இதர உரங்களை இடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: பருவமழை மற்றும் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், நம்பிக்கையுடன் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளோம்.ஆனால், அதிக தேவையுள்ள உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பாசனத்துக்கு கால்வாயில், தண்ணீர் வரும் முன் தென்னை மரங்களுக்கும், அடியுரமும் இட வேண்டியுள்ளது.எனவே, வேளாண்துறையினர், தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், உரங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்து, தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.வட்டார வேளாண்துறையினர் கூறுகையில், 'சாகுபடிக்கு தேவையான பரிந்துரைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது; மண் வளம் பாதிப்பதை தவிர்க்க, இயற்கை வேளாண் இடுபொருட்கள் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ரசாயன உரங்கள் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.