| ADDED : மே 19, 2024 12:38 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், 300 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. ஓடைகள் துார்வாரும் பணி துவங்கி நடந்து வருகிறது.கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தற்போது நகரில் ஆங்காங்கே கோடை மழை பெய்ய துவங்கி உள்ளது. மழை காரணமாக, கொசுக்கள் உற்பத்தியும் அதிகரிக்க துவங்கி விட்டது. இதை தடுக்கும் வகையில், பருவகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள துவங்கியுள்ளது.அவ்வகையில், மாநகரில் உள்ள, 60 வார்டுகளில் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடியிருப்பு, பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொசுப்புழு உற்பத்தியை தடுக்க, தேங்கிய மழைநீரை அகற்றி வருகின்றனர். இப்பணிகளுக்காக, வார்டுக்கு, ஐந்து பணியாளர்கள் வீதம், 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார பணிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் உள்ளிட்ட ஓடைகளில் துார்வாரும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. நேற்று பட்டுக்கோட்டை நகரில் நடந்து வரும் ஓடை துார்வாரும் பணியை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்கவும் தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.