திருப்பூர்;திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நேற்று முதல் துவங்கியுள்ளது; இதுவரை, 90 பேர் இணைந்துள்ளனர்.துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர், 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு, வரும் ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், குரூப் 1 மற்றும் குரூப் - 2 தேர்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்பு, கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்றுமுதல் துவங்கியுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் பயற்சி வகுப்பை துவக்கிவைத்தார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த குரூப் தேர்வு எழுத உள்ள 90 பேர் பயிற்சி வகுப்பில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு, வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைவரை, காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கூறியதாவது:வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில், டி.என்.பி.எஸ்.சி., ன் புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்து பாடங்களில் பயிற்சி அளிப்பதற்காக, 10 பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியில் இணைந்துள்ளோரின் திறமையை பரிசோதிக்கும்வகையில், வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.கலெக்டர் அலுவலக நான்காவது மாடியில், மூவாயிரம் புத்தகங்களுடன் நுாலகம் இயங்குகிறது. குரூப் தேர்வுக்கு தயாராவோர், பயிற்சி வகுப்பு நேரம் முடிந்தபின், மாலை, 5:45 மணி வரை, நுாலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மாவட்டத்தில் குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுதுவோர், இலவச பயிற்சி வகுப்பில் இணைய விரும்புவோர், 0421 2999152, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.